மும்பைக்கு ‘ரெட் அலர்ட்' இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2019-09-18 23:00 GMT
மும்பை,

மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. அதன்பின்னர் பருவமழை அதிதீவிரம் அடைந்து கொட்டியது. கடந்த ஜூன் மாதம் முதல் இந்த மாதம் தொடக்கம் வரையிலும் பலமுறை கொட்டி தீர்த்த கனமழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வெளுத்து வாங்கிய பேய் மழைக்கு கொத்து, கொத்தாக உயிர் பலியும் ஏற்பட்டது.

அண்மையில் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் இரவு முதல் இரண்டு நாட்கள் விடாமல் மழை கொட்டியது. இதன் காரணமாக மும்பை நகரம் வெள்ளக்காடாய் மாறியது. சாலைகள், தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பஸ், ரெயில்கள் போக்குவரத்து அடியோடு முடங்கியது.

இரவில் வீடு திரும்ப முடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் ரெயில் நிலையங்களில் பரிதவித்தனர். விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மிக கனமழை பெய்யும்

கொட்டி தீர்த்த கனமழை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனந்த சதுர்த்தி வரையிலும் மும்பையில் பலத்த மழை பெய்து வந்தது. அதன்பின்னர் கடந்த 6 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து இருந்தது. பெரியளவில் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வானிலை மிக மிக மோசமாக மாற வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்தும் சிவப்பு நிற எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்) விடப்பட்டு உள்ளது.

தானே, பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுதான்.

இதற்கு முன் கடந்த 1954-ம் ஆண்டு 345.16 செ.மீ. மழை பெய்து இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்