கடக்நாத் கோழி வளர்ப்புக்காக விவசாயிகளிடம் பண மோசடி: தனியார் நிறுவன இயக்குனர்கள் உள்பட - 3 பேர் கைது

கடக்நாத் கோழி வளர்ப்புக்காக விவசாயிகளிடம் பண மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன இயக்குனர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-09-17 23:15 GMT
மும்பை,

மத்திய பிரேதச மாநிலங்களில் கடக்நாத் (கருங்கோழி) ரக கோழிகள் அதிகளவில் கிடைக்கின்றன. மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதால் இந்த கோழிகளுக்கு கிராக்கி அதிகம். கடக்நாத் ரக கோழி இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மராட்டியத்தில் மகாராயத் என்ற தனியார் நிறுவனம் கடக்நாத் கோழிகளை வைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதீர் மோகிதே, இயக்குனர்கள் அனுமந்த் ஜக்தாலே, சந்தீப் மோகிதே உள்ளிட்டவர்கள் மீது சாங்கிலி, சத்தாரா, புனே, கோலாப்பூர், பால்கர், நாசிக், அவுரங்காபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் அளித்து உள்ளனர்.

இந்த நிறுவனம் கடக்நாத் கோழி குஞ்சுகளை விவசாயிகளிடம் வளர்க்க கொடுத்து அதன் முட்டையை ரூ.60-க்கும், வளர்ச்சி அடைந்த கோழியை ரூ.600 முதல் ரூ.1,200 வரை விலை கொடுத்து வாங்குவதாகவும் கூறி பணமோசடியில் ஈடுபட்டு உள்ளது.

கடக்நாத் கோழியை வைத்து மராட்டியத்தில் 10 ஆயிரம் விவசாயிகளிடம் ரூ.550 கோடி வரை மோசடி நடந்து இருப்பதாகவும், இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் எனவும் சுவாபிமானி சேட்காரி சங்கத்னா அமைப்பின் தலைவர் ராஜூ செட்டி வலியுறுத்தி உள்ளார்.

இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த சாங்கிலி போலீசார் நிறுவனத்தின் இயக்குனர்களான சந்தீப் மோகிதே, அனுமந்த் ஜக்தாலே மற்றும் நிறுவன கணக்காளர் பிரித்தம் மானே ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதிர் மோகிதே உள்ளிட்ட 3 பேரை தேடிவருகின்றனர்.

தற்போது இந்த வழக்கை சாங்கிலி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கடக்நாத் கோழி நிறுவன மோசடியில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாங்கிலியில் சிலர் கடக்நாத் கோழிகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ரத யாத்திரை வாகனத்தின் மீது வீசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்