தண்டவாளம் உடைந்து விபத்து திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

திருநெல்வேலி-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்த தண்டவாளம் திடீரென உடைந்தது. என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக அந்த ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

Update: 2019-09-17 22:45 GMT
மும்பை,

திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை 7.45 மணி அளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் ராய்காட் மாவட்டம் ரோகாவை கடந்து பென் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது, தண்டவாளத்தில் பயங்கர சத்தம்கேட்டது. மேலும் ரெயில் பெட்டிகள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் சத்தம்போட்டனர். சுதாரித்துக்கொண்ட என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் கீழே இறங்கி வந்து தண்டவாளத்தை பார்த்தனர். அப்போது தண்டவாளம் உடைந்து கிடந்தது. மேலும் அந்த இடைவெளியில் ரெயில் பெட்டியின் ஒரு சக்கரம் இறங்கிநின்றது. அதிர்ஷ்டவசமாக அந்த ரெயில் பெட்டி கவிழவில்லை. தக்க சமயத்தில் ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்தில் இருந்து அந்த ரெயில் தப்பியது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பன்வெல் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தின் உடைந்த பகுதியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அந்த வழியாக பன்வெல் நோக்கி வந்த ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அந்த தண்டவாளம் சரி செய்யப்பட்டது. விபத்தில் சிக்கிய ரெயில் சக்கரம் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்