கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-09-17 23:00 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில், கம்பம், பெரியகுளம், சின்னமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவில் நிலத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் சாலை விரிவாக்கத் திட்டப் பணிக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் தனித்தனியாக மனுக்கள் அளித்தனர்.

அரசாணை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘நாங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருகிறோம். கோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கலாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி நாங்கள் வாழும் பகுதிக்கு எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் செய்திகள்