பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தயங்குவர் தேசபக்தி மிக்க முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள் மந்திரி ஈசுவரப்பா சர்ச்சை பேச்சு

தேசபக்தி மிக்க முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தயங்குவர் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் ஈசுவரப்பா பேசியுள்ளார்.

Update: 2019-09-15 22:00 GMT
பெங்களூரு, 

தேசபக்தி மிக்க முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள் என்றும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தயங்குவர் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் ஈசுவரப்பா பேசியுள்ளார்.

பா.ஜனதாவுக்கு வந்துவிடுவோம்

ஸ்ரீராமசேனை சார்பில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தி வருகிறது. நான் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன். அவர்கள், எங்கள் தொகுதியில் முஸ்லிம் ஓட்டுகள் அதிகமாக உள்ளது. அதனால் தான் காங்கிரசில் உள்ளோம். இல்லையென்றால் பா.ஜனதாவுக்கு வந்துவிடுவோம் என்று கூறினர். இது வெட்கக்கேடானது.

வாக்களிக்க தயங்குவார்கள்

எனது தொகுதியிலும் சுமார் 50 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள் உள்ளன. ஆனால் அவர்களிடம் போய் ஓட்டு கேட்கவில்லை. தேசபக்தி கொண்ட முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க தயங்குவார்கள்.

பசுவதை தடுப்பு சட்டம் பா.ஜனதா ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை காங்கிரஸ் அரசு ரத்து செய்துவிட்டது. இப்போது கர்நாடகத்தில் மீண்டும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவருவோம். அயோத்தியில் ராமர் கோவில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது. இப்போது அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும்.

இவ்வாறு ஈசுவரப்பா பேசினார்.

முஸ்லிம்களை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய ஈசுவரப்பாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்