பெங்களூரு அருகே கனகபுரா ரோட்டில் அமைகிறது 700 ஏக்கரில் திரைப்பட நகரம் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூரு அருகே கனகபுரா ரோட்டில் 700 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
பெங்களூரு,
பெங்களூரு அருகே கனகபுரா ரோட்டில் 700 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.
கர்நாடக தொழில் வர்த்தக சபை நிறுவன நாள் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
திரைப்பட நகரம்
இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெங்களூரு, அருகே கனகபுரா ரோட்டில் 700 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாதாகுனி எஸ்டேட்டை திரைப்பட நகரமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 8 மாதங்களில் பெங்களூருவின் நிலையையே மாற்றும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
வெளிவட்டச்சாலை
15 நாட்களுக்கு ஒரு முறை பெங்களூருவில் நகர்வலம் நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். ரூ.11 ஆயிரத்து 500 கோடி செலவில் பெங்களூரு வெளிவட்டச்சாலை அமைத்தல், ரூ.14 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரெயில் திட்டம், ரூ.11 ஆயிரம் கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஏரிகளை மேம்படுத்த தேவையான அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. குப்பையை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக தீர்வு காணப்படும். பிரதமர் மோடியின் செயல் பாடுகளால், இந்தியாவை உலக நாடுகள் மிகவும் மதிக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் மோடி வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார்.
அடிப்படை வசதிகள்
கர்நாடகத்தில் தொழில் வர்த்தகத்தில், கர்நாடக தொழில் வர்த்தக சபையின் பங்கு முக்கியமானது. வணிகம் மற்றும் சேவைத்துறைகள் மூலம் கர்நாடகத்திற்கு அதிக வரி வருவாய் கிடைக்கிறது. பெங்களூருவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த விழாவில் பேசிய தொழில் அதிபர்கள், “கர்நாடகத்தில் மொத்த வரி வருவாயில் 70 சதவீதம் பெங்களூருவில் இருந்து கிடைக்கிறது. அதனால் பெங்களூருவில் வாகன நெரிசல், குப்பை, மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதில் நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்த வேண்டும்“ என்றனர்.
இதில் கர்நாடக தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவை கைவிட்டார்
சித்தராமையா ஆட்சி காலத்தில் மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு முதல்-மந்திரியாக வந்த குமாரசாமி, அதை மாற்றிவிட்டு ராமநகரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு சித்த ராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து குமாரசாமி அந்த முடிவை கைவிட்டார்.
இந்த நிலையில் எடியூரப்பா, பெங்களூரு அருகே திரைப்பட நகரம் அமைக்கப் படுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.