கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2¼ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்று மோசடி உதவி சப்-இன்ஸ்பெக்டர் கைது

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.2¼ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்று மோசடியில் ஈடுபட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-09-14 22:30 GMT
வசாய், 

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.2¼ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்று மோசடியில் ஈடுபட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகரெட் பெட்டிகள் மாயம்

பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள பிவண்டி - காமன் ரோட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாலிவ் போலீசார் டெம்போவில் கடத்தி செல்லப்பட்ட ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பிலான இந்தோனேஷியா நாட்டு சிகரெட் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் டெம்போவில் இருந்த 8 பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகள் வாலிவ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷெரிப் சேக்கின் (வயது52) கட்டுப்பாட்டில் இருந்தது. சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்கள் தொடர்பான விவரங்கள் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகள் அதிகளவில் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

உதவி சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதையடுத்து நடந்த விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பிலான 100 பெட்டி சிகரெட்டுகளை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷெரிப் சேக் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஷெரிப் சேக்கை கைது செய்தனர். மேலும் சிகரெட் விற்ற பணம், இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் மற்றும் ஏஜெண்டுகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்