விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற மாணவர்கள் பாடுபட வேண்டும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு

விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற மாணவர்கள் பாடுபட வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.

Update: 2019-09-14 22:45 GMT
கன்னியாகுமரி,

விவேகானந்த கேந்திரா சார்பில், விவேகானந்தர் நினைவு மண்டபம் 50-வது ஆண்டு தொடக்க விழா கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 10 ஆண்டுகள் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அமெரிக்காவில் 127 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோ மாநாடு நடந்தது. அதில் ஏராளமான மதத்தினர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மதத்தினரும் தாங்கள் தான் இந்த உலகத்தில் நல்லவர்களாக இருக்கிறோம் என்று சொல்லி கொண்டிருந்தார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர் தான் அங்கு இருந்த அனைவரையும் பார்த்து, சகோதர, சகோதரிகளே என அழைத்து அந்த சபையில் வெற்றி பெற்றுவிட்டார்.

மேலும், அவர் சின்ன சின்ன அருவிகள் எப்படி ஆறுகளில் சேர்ந்து, கடலை சென்றடைகிறதோ, அதே போல், நாம் எல்லா வழிகளிலும் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்தும் கடவுளை போய் சென்றடைகிறது என்று கூறினார். 127 ஆண்டுகள் ஆனாலும், அவர் பேசிய கருத்துகள் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

100 இளைஞர்கள்

ஒவ்வொரு மனிதர்களும் அண்ணன், தங்கை என்ற உணர்வுடன் ஒற்றுமையுடன் பழக வேண்டும். பக்தி கொண்ட 100 இளைஞர்களை கொடுங்க, இந்த உலகமே மாறிவிடும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அவரது கனவு நிறைவேற மாணவர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

விழாவில், கேந்திர வித்யாலயா தலைவர் ஹனுமந்த ராவ், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் ராமகுமார், பள்ளி முதல்வர் ஆபிரகாம் லிங்கம், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்