உயிரிழப்புக்கு காரணமான பேனர் கலாசாரம் வருத்தமளிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பேட்டி

பாகூர் ஏரி சாலையை பார்வையிட்டு கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் உயிரிழப்புக்கு காரணமான பேனர் கலாசாரம் வருத்தமளிக்கிறது என்றார்.

Update: 2019-09-14 23:30 GMT
பாகூர்,

புதுச்சேரியில் இருக்கும் போது வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பெடி வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான திட்டங்களை அவர் செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

இந்த வகையில் புதுவையில் உள்ள ஏரிக்கரைகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு எடுத்து அந்த பணிகளில் தன்னார்வலர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், தேசிய மாணவர் படை வீரர்களை கவர்னர் கிரண்பெடி ஈடுபடுத்தி வருகிறார்.

புதுச்சேரியின் 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரியை நேற்று மீண்டும் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். அங்கு மரக்கன்றுகள் நடும் பணியை நிறைவு செய்தார். தொடர்ந்து பாகூர் ஏரியில் கரை வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் கவர்னர் கிரண்பெடி நடந்து சென்றார். பங்காரு வாய்க்கால் உருவாக்கியதாக கூறப்படும் சோழற் கால நடன மங்கைகளின் பங்காரி, சிங்காரி சிற்பங்களை மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

அங்கு மாட்டு வண்டி கொண்டு வரப்பட்டு மேடை போல் அதில் ஏறி பொதுமக்களிடையே கவர்னர் கிரண்பெடி பேசினார். அவர் கூறும்போது, ‘பாகூர் ஏரியை புனரமைப்பு செய்து, நீர் வழிப்பாதையை உருவாக்கியதில், பங்காரி, சிங்காரி சகோதரிகளின் பங்கு முக்கியமானது. இதேபோல், புதுச்சேரிக்கு நீர் ஆதாரத்தை உருவாக்கிய ஆயி உள்பட பல பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களை இந்த நேரத்தில் நாம் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்திட வேண்டும். வரும் பொங்கல் பண்டிகையை இங்கு நாம் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவோம். அதற்குள், பாகூர் ஏரியின் சாலையை விரைவில் சீரமைத்திட வேண்டும்’ என்றார்.

பின்னர், அரங்கனூரில் ஏரிக்கரை அருகே உள்ள எரமுடி அய்யனார் கோவிலில் கவர்னர் கிரண்பெடி சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், பேனர் கலாசாரம் சமூகத்திற்கு மிகுந்த பாதிப்பாகவும் உயிரிழப்புக்கு காரணமாகவும் அமைந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. கூட்டு முயற்சியும், இரவு ரோந்து பணிகளும் மட்டுமே பேனர் கலாசாரத்திற்கு தீர்வு. பொதுப்பணித்துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே இதனை தடுக்க முடியும்’ என்றார்.

இதனை தொடர்ந்து, கவர்னர் கிரண்பெடி, பாகூர், கன்னியக்கோவில் சாலையில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து குப்பை கிடங்கை பார்வையிட்டார். அப்போது, உள்ளாட்சி துறை செயலர் அசோக்குமார், இயக்குனர் மலர்கண்ணன் ஆகியோரிடம், குப்பையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கிருந்து கவர்னர் கிரண்பெடி புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம், கண்காணிப்பு பொறியாளர்கள் பெட்ரோ குமார், சேகர், செயற்பொறியாளர் ஜீவதயாளன், உதவி பொறியாளர் சங்கர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று இருந்தனர்.

மேலும் செய்திகள்