அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
விளம்பர பேனர்கள்
சென்னை ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவின்படி, மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மாவட்டத்தில் தனியார், அரசு நிலம் மற்றும் கட்டிடம், சாலைகள், மைதானங்கள் உள்ளிட்ட பொதுவெளிகளில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பரம், வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டிகள் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. அனுமதியின்றி விளம்பர, வரவேற்பு பேனர்கள் மற்றும் தட்டிகள் அமைப்பது, கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானதாக அமையும். இந்த விதிமுறைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அனுமதி
எனவே பொதுமக்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகள், பொது அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர்கள் வைக்க விரும்பினால் உரிய அனுமதி பெற வேண்டும். அரசால் வரையறை செய்யப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து, டிஜிட்டல் பேனர் வைக்கும் இடத்தின் எல்கைகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனியாக எத்தனை நாட்களுக்கு (அதிகபட்சம் 6 நாட்கள்), எவ்வளவு எண்ணிக்கையில், எத்தனை அளவுகளில் பேனர் வைக்கப்பட உள்ளது என்ற விவரங்களுடன் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து வகையிலும் சரியாக பூர்த்தி செய்தும், உரிய அலுவலரிடம் பெறப்பட்ட தடையின்மை சான்றுகளை இணைத்தும் மனுவை சமர்ப்பிக்கும் பட்சத்தில் மனு செய்த 48 மணி நேரத்துக்குள் மாவட்ட கலெக்டரின் உரிய அனுமதி வழங்கப்படும்.
நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், அனைத்தும் சட்ட விரோதமானவை என தெரிவிக்கப்படுகிறது. அதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி விதியை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. எனவே யாரும் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.