பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வாழ்த்து மடல்: அதிகாரிகள் உள்பட அனைத்து போலீசாருக்கு கட்டாய விடுப்பு பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உத்தரவு
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வாழ்த்து மடல் கொடுத்து போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து போலீசாருக்கும் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்று நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
பெங்களூரு,
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வாழ்த்து மடல் கொடுத்து போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து போலீசாருக்கும் கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்று நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
போலீஸ் பணி
சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் முழு பொறுப்பு போலீஸ் துறையை சேர்ந்துள்ளது. இதனால் போலீஸ்காரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தினமும் 8 மணி நேரத்துக்கு அதிகமாக பணி செய்கிறார்கள். ஏராளமானவர்களுக்கு வார விடுமுறையும் சரியாக கிடைப்பது இல்லை. இதனால் போலீஸ் பணி என்பது மனஅழுத்தம், பணிச்சுமை நிறைந்தது என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
குதிரை கொம்பான விடுமுறை
இதற்கு பெங்களூரு மாநகர போலீசாரும் விதிவிலக்கல்ல. பரந்து விரிந்துள்ள பெங்களூருவின் மக்கள்தொகை 1 கோடியை தாண்டியுள்ளது. இதனால் நகரில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிப்பது, முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு குற்றங்களை தடுப்பது என்பது பெங்களுரு மாநகர போலீசாரின் முன்பு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
ஏனென்றால் சவாலை சமாளிக்க போதுமான அளவில் போலீசாரும் இல்லை. அதாவது நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆள்பற்றாக்குறையும் உள்ளது. இதனால் போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் தங்களின் வார விடுமுறை தினங்களிலும், ஒரு நாளைக்கு கூடுதல் நேரமும் பணி செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனால் அவர்களுக்கு கிடைக்கும் விடுமுறை என்பது குதிரை கொம்பாகத்தான் உள்ளது. இதனால் போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் தங்களின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாத நிலை உள்ளது.
வாழ்த்து அட்டைகளுடன் விடுமுறை
இந்த நிலையில் நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், அனைத்து மண்டல துணை போலீஸ் கமிஷனர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அந்த உத்தரவில், ‘ஒவ்வொரு போலீஸ்காரர்களும், போலீஸ் அதிகாரிகளும் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு மாநகர போலீஸ் சார்பில் அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகள் வாழ்த்து மடல்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ்காரர்களும், போலீஸ் அதிகாரிகளும் பிறந்தநாளை கொண்டாடவும், பணிச்சுமையில் இருந்து வெளியே வரவும் அவர்களின் பிறந்நதாளில் கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டும். கடினமான சூழல் நிலவினாலும் உயர் அதிகாரிகள் பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு விடுமுறை அளிக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாஸ்கர்ராவின் இந்த உத்தரவுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.