காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 18-ந் தேதி நடக்கிறது எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற சித்தராமையா திட்டம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

Update: 2019-09-14 22:30 GMT
பெங்களூரு, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

18-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் இன்னும் எதிர்க்கட்சி தலைவரை காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார், பரமேஸ்வர், எச்.கே.பட்டீல், தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக உள்ள சித்தராமையா வருகிற 18-ந் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு விதானசவுதாவின் 3-வது மாடியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே கலந்துகொள்ள உள்ளனர். மேலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பதவியை கைப்பற்ற...

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கர்நாடகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள், அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளதா?, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்டவை குறித்து சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார். அதே நேரத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல் இருக்கும் பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது, அரசின் தோல்விகளை மக்களிடையே கொண்டு செல்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், அந்த பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் யாரையும் நியமிக்காமல் உள்ளது.

இதனால் வருகிற 18-ந் தேதி நடைபெறும் கூட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்தும் எம்.எல்.ஏ.க்களிடம் சித்தராமையா ஆலோசிக்க உள்ளார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கேட்கவும் சித்தராமையா முடிவு செய்திருக்கிறார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு கிடைத்தால், அதுபற்றி காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற சித்தராமையா திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்