சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

ராஜபாளையத்தில் மேம்பாலப்பணி நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ள நிலையில் அந்தச்சாலையை சீரமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-09-09 22:30 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் அப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலப்பணிகள் தொடங்கியது முதல், அந்த வழியாக பஸ், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாததால், மலையடிப்பட்டி 60 அடி சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் இதுவரை இந்த மாற்றுப் பாதை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. சில இடங்களில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடந்ததால், அந்த இடம் முழுவதும் செம்மண் பாதையாக காட்சியளிக்கிறது. இதனால் கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, சுமார் 10 அடி உயரம் வரை மண், தூசி பறக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும், சாலையை சீரமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே இதனை கண்டித்தும், சாலையை சீரமைக்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சத்திரப்பட்டி சாலையில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முகத்தில் திரையை (மாஸ்க்) அணிந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

இந்த ஊர்வலம் மலையடிப்பட்டி சாலை வழியாக சென்று 4 முக்கு பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலம் நிறைவடைந்த இடத்தில், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாற்றுப் பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும், குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்