தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்த மான்கள், கோடியக்கரை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன

தஞ்சை சிவகங்கை பூங்காவில் 50 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மான்கள், கோடியக் கரை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப் பட்டன.

Update: 2019-09-09 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சிவகங்கை பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த பூங்காவில் 8 ஆண் மான் உள்பட மொத்தம் 41 மான்கள் உள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பராமரிக்க கூடாது என சட்டம் உள்ளதால் பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இடமாற்றம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி பூங்காவில் உள்ள 41 மான்களையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப் பட்டன.

அதன்படி மான்கள் நேற்று கோடியக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதற்காக மினி லாரியில் மரக்கூண்டு தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் மான்கள் ஏற்றப்பட்டு, காலை, மாலையிலும் வனச்சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இன்றும்(செவ்வாய்க்கிழமை) மான்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு கூண்டில் 8 முதல் 10 மான்கள் வரையில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

முன்னதாக மான்களை மாவட்ட வனச்சரக அலுவலர் குருசாமி, வனச்சரகர் ஜோதிகுமார், வனவர் பார்த்தசாரதி, வனத்துறை கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் மனோகரன், தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வம், உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது மாநகராட்சி மேலாளர் கிளமெண்ட் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகையில், “தஞ்சை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பூங்காவில் உள்ள 41 மான்கள் கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. நாளைக்குள் இந்த மான்கள் அங்கு கொண்டு செல்லப்படும். மான்களை டாக்டர்கள் பரிசோதனை செய்த பின்னர்தான் வாகனங்களில் ஏற்றுகிறோம்.

அதேபோல் அங்கு காடுகளில் மான்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கும் டாக்டர்கள் குழுவினர் 10 நாட்கள் தொடர்ந்து இந்த மான்களை கண்காணிப்பார்கள். மான்கள் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்