ஐதராபாத்தில் நடந்த விழாவில் தெலுங்கானா கவர்னராக தமிழிசை பதவி ஏற்றார் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வாழ்த்து
ஐதராபாத்தில் நடந்த விழாவில், தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார். அவருக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
ஐதராபாத்,
இதையடுத்து தமிழக பாரதீய ஜனதா கட்சித்தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை (வயது 58), தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி உத்தரவிட்டார். தமிழிசைக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழிசை, 8-ந் தேதி தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் நடந்தன.
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த கண்கவர் விழாவில், தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை பதவி ஏற்றார். அவருக்கு அந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெயரை தமிழிசை பெறுகிறார்.
ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட தமிழிசைக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மாநில மந்திரிகள் மற்றும் தலைவர்கள், உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னர் பதவி ஏற்றதும், மேடையில் இருந்து இறங்கி கீழே வந்த தமிழிசை, முதல் வரிசையில் அமர்ந்திருந்த தனது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
மேலும், இந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதே போன்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர். சரத்குமார், ராதிகா சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர். தனபாலன், வி.ஐ.டி.துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோரும் விழாவில் பங்கேற்று தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்று இறங்கிய தமிழிசையை, விமான நிலையத்தில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மந்திரிகள், உயர் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
விமான நிலையத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய தமிழிசை, “தெலுங்கானா மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பது எனக்கு தெரியும். அதற்கேற்ப நான் செயல்படுவேன். இங்குள்ள கலாசாரத்தையும், பொதுமக்களையும் புரிந்து வைத்திருப்பதால் இங்கு பணிபுரிவதில் எனக்கு சிரமம் இருக்காது” என கூறினார்.