தஞ்சையில் கடைகள் முன்பு அமைக்கப்பட்ட இரும்புவேலியை அகற்றக்கோரி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் கடைகள் முன்பு அமைக்கப்பட்ட இரும்பு வேலியை அகற்றக்கோரி வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-08 22:15 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ் நிலையம் ஆகிய பஸ் நிலையங்கள் தற்காலிக பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணிக்கு தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையம் முன்பு இரும்பு வேலிக்கம்பிகள் அமைக்கப்பட்டு பஸ் நிலையங்கள் மூடப்பட்டன.

மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளின் முன்பு இரும்பு வேலிக்கம்பிகள் அமைக்கப்பட்டன. இதனால் கடைக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று காலை கடையை திறக்க வந்த கடைக்காரர்கள் கடை முன்பு வேலி அமைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், பொருளாளர் வாசுதேவன், தேநீர் கடை சங்க தலைவர் ஜெயபால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பாண்டியன், வக்கீல் நல்லதுரை, தமிழக மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பஸ் நிலையம் பகுதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் இரும்பு வேலி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் கூறுகையில், பழைய பஸ் நிலையம் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதோடு, கடைகளின் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு வேலி அமைத்துள்ளனர்.

இதனால் கடைகளின் உரிமையாளர்கள் கூட உள்ளே செல்ல முடியவில்லை. கடையில் உள்ள பொருட்களை வெளியே எடுத்துச்செல்ல முடியவில்லை. பஸ் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பதோடு, எங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கிறோம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் பஸ் நிலையங்கள் இடமாற்றம் செய்வது குறித்து முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லை. தீபாவளி பண்டிகை முடியும் வரை கடைகள் பழைய பஸ் நிலைய பகுதிலேயே தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பின்னர் எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடைந்த பின்னர் இங்கு கடைகள் வைத்திருப்பவர்ளுக்கே முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கித்தர வேண்டும்.

மேலும் இரும்பு வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள், பொதுமக்களை திரட்டி போராட்டங்களை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்த போது தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு ஒரு டவுன் பஸ் சென்றது.

தஞ்சை பஸ் பழைய பஸ் நிலையம் அருகே பஸ் சென்ற போது அந்த வழியாக சென்ற பெண் ஒருவரின் காலில் பஸ் ஏறி இறங்கியது. இதனால் அந்த பெண் வலியால் அலறி துடித்தார்.

இதனால் சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். உடனே போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணை காப்பாற்றி உடனடியாக சிகிச்சைக்காக போலீஸ் வேனிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்