திருக்கோவிலூர் அருகே, குழவி கல்லை தலையில் தூக்கிப்போட்டு ஓட்டல் உரிமையாளர் கொலை - அண்ணன் வெறிச்செயல்

திருக்கோவிலூர் அருகே குழவி கல்லை தலையில் தூக்கிப்போட்டு ஓட்டல் உரிமையாளரை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்

Update: 2019-09-08 22:15 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அசோகன் (வயது 36). அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த, இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும், இவருடைய அண்ணன் ஆனந்தன் (42) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை அசோகன் அவரது ஓட்டலின் பின்புறத்தில் இருந்த ஒரு அறையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், கலியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அசோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்தன், அசோகன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்து பேசியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தன், அசோகனை தாக்கியதோடு, அவரது தலையில் குழவி கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததும் தெரிந்தது. ஆனால் அவர் எதற்காக தனது தம்பியை கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து கண்டாச்சிபுரம் போலீசார், ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்