லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-08 22:30 GMT
கூடலூர்,

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் குமுளி அமைந்து உள்ளது. கூடலூரின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த பாதை அமைந்து உள்ளது. சபரிமலை மற்றும் தேக்கடி சுற்றுலா தலத்திற்கு வரும் வாகனங்களும், குமுளிக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், கேரள மாநில ஏலத்தோட்டங்களுக்கு சென்று வரும் கூலித்தொழிலாளர்களின் ஜீப் மற்றும் கார்களும் இந்தப் பாதை வழியாக தினசரி சென்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் இரைச்சல் பாலத்திற்கு மேல் 4-வது வளைவில் உள்ள மரம் ஒன்று முறிந்து ரோட்டில் விழுந்தது.

இதனால் கூடலூர் பகுதியில் இருந்து குமுளிக்கு சென்ற வாகனங்களும், குமுளியிலிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களும் சாலையை கடந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். மலைப்பாதையில் முறிந்து விழும் மரத்தை வழக்கமாக வனத்துறையினர்தான் வெட்டி அப்புறப்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் வருவதற்குள் போலீசார் முன்வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்ப்படுத்திய நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்