சட்டசபை தீர்மானத்தை வழங்கினார்கள்: இலவச அரிசி வழங்க கிரண்பெடி மறுப்பு; கவர்னர் மாளிகையில் இருந்து நாராயணசாமி- அமைச்சர்கள் வெளிநடப்பு

சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று இலவச அரிசி வழங்க வற்புறுத்தியபோது கிரண்பெடி அதை ஏற்க மறுத்தார். இதனால் கவர்னர் மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2019-09-08 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி வெற்றிபெற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி முதல்கட்டமாக சிவப்பு நிற ரேஷன்கார்டுகளுக்கு தலா 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற கார்டுகளுக்கு தலா 10 கிலோ அரிசியும் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்தார். அரிசிக்கு பதிலாக அதற்கான தொகையை பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆட்சி அமைந்து 39 மாதங்களில் 17 மாதங்கள் இலவச அரிசியும், 5 மாதங்கள் அதற்கான பணமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

ஆனால் தேர்தல் வாக்குறுதியின்படி இலவச அரிசி வழங்குவது என்பதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தலின் பேரில் சோதனை செய்த பிறகே அரிசி கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அரிசி வழங்குவதற்கான அனுமதி கோரி டெண்டர் வைக்க கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டார்.

இந்தநிலையில் மக்களின் விருப்பப்படி அனைவருக்கும் இலவச அரிசி வழங்குவது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை கவர்னரிடம் கொடுக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, தீப்பாய்ந்தான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, வெங்கடேசன் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு நேற்று மதியம் சென்றனர்.

அங்கு கவர்னரை சந்தித்து அவர்கள் பேசினார்கள். அப்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினார்கள். ஆனால் அனைவருக்கும் இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையை விட்டு அவர்கள் வெளியேறினர்.

கவர்னர் மாளிகைக்கு வெளியே முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் அனைவருக்கும் இலவச அரிசி வழங்க புதுவை சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் நகலை கவர்னரிடம் வழங்கினோம். மக்கள் அனைவரும் அரிசிதான் கேட்கிறார்கள். அதை எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் வலியுறுத்தினார்கள். இதற்காக அரிசி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கவர்னருக்கு அமைச்சர் கந்தசாமி கோப்பு அனுப்பினார்.

இந்த ஆண்டு இலவச அரிசி வழங்குவதற்காக ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒப்புதல் கேட்டபோது அந்த கோப்பினை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். மக்களுக்கு அரிசி கொடுக்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று எங்கள் கோரிக்கையை கவர்னர் கிரண்பெடி நிராகரித்தார். இதனால் அங்கிருந்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிடுவோம். நீதிமன்றத்தையும் நாடுவோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்