‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் சுற்றுப்பயணமாக மராட்டியம் வந்தார். இதில் மும்பையில் புதிதாக 3 மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் மும்பை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பிரதமர் மோடி வில்லேபார்லேயில் உள்ள லோக்மான்ய சேவா சங் என்ற விநாயகர் மண்டலில் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள விடுதலை போராட்ட வீரர் லோக்மான்ய பாலகங்காதர திலகரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ உலக மைய மாநாட்டு அரங்கத்தில், மும்பையில் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பில் 42 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் 3 புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மும்பையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் இயக்குவதற்காக பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் பெங்களூருவில் ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 500 மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் பெட்டி மும்பை மெட்ரோ ரெயில் கழகத்திடம் வழங்கப்பட்டது.
75 நாட்களில் தயாரிக்கப்பட்ட அந்த மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதன் வடிவமைப்பு குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும கமிஷனர் ஆர்.ஏ.ராஜீவ் விளக்கம் அளித்தார். குறிப்பாக பயணிகள் தங்களது சைக்கிளுடன் பயணம் செய்யும் வசதி இந்த மெட்ரோ ரெயில் பெட்டியில் உருவாக்கப்பட்டு இருப்பது பற்றியும் எடுத்து கூறினார். பிரதமர் மோடி தனது மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவுரங்காபாத் புறப்பட்டு சென்றார்.