சூளகிரி அருகே, ஏரி தூர்வாரும் பணி - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு

சூளகிரி அருகே ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-09-07 22:30 GMT
ஓசூர், 

சூளகிரி அருகே உள்ள உல்லட்டி ஊராட்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி தூர்வாரும் பணிகளையும் மற்றும் குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 100 ஏரிகள், 325 குளம், குட்டைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது கூடுதலாக 100 ஏரிகளில்் தூர் வாரும் பணி மேற்கொள்ள முதல்-அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். 200 ஏரிகள், 325 குளம், குட்டைகள் என மொத்தம் 525 பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட இம்மிடிநாயக்கனபள்ளி, மருதாண்டபள்ளி, துப்புகானபள்ளி, கானலட்டி, உல்லட்டி, சாமனப்பள்ளி, பீர்ஜேபள்ளி, கொம்மேபள்ளி, ஆலூர், அத்திமுகம் ஆகிய 10 ஊராட்சிகளில் தலா 5 லட்ச ரூபாய் மதிப்பில் ஏரி தூர் வாரும் பணிகளும், 34 குளம், குட்டைகளும் தலா 1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதேபோல், உல்லட்டியில் நீர் நிலைகளை தூர்வாரும் சிறு பாசன ஏரியில், ரூ. 5 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், விமல்ரவிக்குமார், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்