கீழ்பென்னாத்தூரில் ஜேக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பென்னாத்தூரில் ஜேக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஜேக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அ.முருகன் தலைமை தாங்கினார். ஜோக்டோ- ஜியோ இணைப்பு சங்க நிர்வாகிகள் ஏ.முருகன், கருணாநிதி, கரீம், சத்தியமூர்த்தி, மகேந்திரன், சா.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் “தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். ஆரம்பப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதை கைவிட வேண்டும்.
போராட்ட காலத்தில் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், புதிய பென்சன் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசாணை 145-ஐ திரும்ப பெற வேண்டும். ஜோக்டோ- ஜியோ நிர்வாகிகளை முதல்- அமைச்சர் அழைத்து பேச வேண்டும்” என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜோதி நன்றி கூறினார்.