வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியில் இருந்து ஒவைசி கட்சி வெளியேற முடிவு?

சட்டசபை தேர்தலையொட்டி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியில் இருந்து ஒவைசி கட்சி வெளியேற முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2019-09-06 23:38 GMT
மும்பை, 

சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பரிபா பகுஜன் மகாசங் என்ற கட்சியை நடத்தி வருகிறார். மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இவரது தலைமையில் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற புதிய கூட்டணி உருவானது. இதில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சியும் இணைந்தது. கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இடம்பெற்று இருந்தபோதிலும், பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ஒவைசி ஆகியோரின் கட்சிகள் தான் முக்கிய கட்சிகள் ஆகும்.

3-வது அணியாக உருவெடுத்த இந்த கூட்டணி பல தொகுதிகளில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலிலும் வஞ்சித் பகுஜன் அகாடி அணி போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தது. தொகுதி பங்கீடு குறித்து எம்.ஐ.எம். கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் வெறும் 8 தொகுதிகள் மட்டுமே எம்.ஐ.எம். கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிருப்தி அடைந்த எம்.ஐ.எம். கட்சி தனது பேச்சுவார்த்தையை பாதியிலேயே நிறுத்தியது. இதனால் இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கூட்டணியில் இருந்து எம்.ஐ.எம். கட்சி வெளியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து வஞ்சித் பகுஜன் அகாடி வெளியிட்ட அறிக்கையில், “முதல்கட்டமாக ஒவைசி அனுப்பிய 17 தொகுதிகளுக்கான பட்டியல் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஒவைசியிடமிருந்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியில் அவர் தொடர்வதாகவே கருதுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மராட்டிய எம்.ஐ.எம். கட்சி தலைவரும், எம்.பி.யுமான இம்தியாஸ் ஜலீ்ல் வெளியிட்ட அறிக்கையில், “ஏறக்குறைய 2 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்தபோதும் எங்களுக்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இது நியாயமற்றது” என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்