விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் போதைப்பொருளுடன் பெண் உள்பட 2 பயணிகள் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் போதைப்பொருளுடன் பெண் உள்பட 2 பயணிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-06 23:32 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோகா நாட்டிற்கு விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் டெர்மினல் 2-ம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களது உடைமைகளை வாங்கி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த ஒரு பெண் உள்பட 2 பயணிகளின் உடைமைகளை எக்ஸ்ரே செய்தபோது சந்தேகப்படும்படியான பார்சல்கள் உள்ளே இருந்ததை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பார்சல்களை பிரித்து பார்த்த போது 2 கிலோ எடையுள்ள ‘அஷிஷ்’ என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவற்றை போதைத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இதனைத்தொடர்ந்து போதைப்பொருள் வைத்திருந்த பெண் மற்றும் ஆண் பயணியை பிடித்து சகார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் முகமது தாரிக் இர்பான், ஜகிரா முகமது என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்