சமூக வலைதளத்தில் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை; என்ஜினீயர் கைது
சமூக வலைதளத்தில் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்த 29 வயது திருமணமான பெண்ணுக்கு ரமேஷ் இஞ்சாமுரி(வயது27) என்பவர் பேஸ்புக்கில் ஆபாச குறுந்தகவல் மற்றும் படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். முதலில் அந்த பெண் இதை கண்டு கொள்ளவில்லை. இந்தநிலையில், தொடர்ந்து 2 மாதமாக அவர் அந்த பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி இருக்கிறார்.
இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண் சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியை தார்டுதேவ் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் இஞ்சாமுரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் என்ஜினீயர் என்பதும், இதுபோல அவர் மேலும் 10 பெண்களுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை வருகிற 9-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.