நீர்நிலைகளை தூர்வார வலியுறுத்தி கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

நீர்நிலைகளை தூர்வார வலியுறுத்தி கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-06 23:00 GMT
கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 8 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது மாவட்டம் முழுவதும் நீர் நிலைகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டு வருகின்றன. ஆனால் கொட்டாம்படி ஒன்றியத்திற்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கண்மாய், ஊருணி, குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. எனவே குடிமராமத்து திட்டத்தில் இப்பகுதி நீர்நிலைகளை சேர்த்து தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் மழை பெய்தது. ஆனால் நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இங்குள்ள நீர்நிலைகளை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று கொட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நீர்நிலைகளை குடிமராமத்து திட்டத்தில் தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது நீர்நிலைகளை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக விவசாயிகள் கூறுகையில், 2 வாரத்திற்குள் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்