ராஜபாளையம் எலக்ட்ரீஷியன் கொலையில் முன்னாள் ராணுவ வீரர் கைது

ராஜபாளையத்தில் எலக்ட்ரீஷியன் கொலையில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-06 23:15 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 22). எலக்ட்ரீஷியன். இவர் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் அருகே சதீஷ்குமார் சடல மாக கிடந்தார்.

போலீஸ் விசாரணையில், சதீஷ்குமார் வேலைக்கு சென்று விட்டு கடைசியாக சம்பந்தபுரம் தெரு குறிஞ்சி நகரில் உள்ள தனது உறவினரான முன்னாள் ராணுவ வீரர் நாராயணசாமியின் வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து நாராயணசாமி (58) என்பவரை பிடித்து விசாரித்ததில் சதீஸ்குமாரை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.

கைதான நாராயணசாமியும் பெற்றோரை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். உறவினர்களான சதீஸ்குமார், நாராயணசாமி இருவரும் எப்போதும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவார்களாம்.

சம்பவத்தன்று நாராயணசாமி வீட்டிற்கு சதீஸ்குமார் சென்றார். பின்னர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நாராயணசாமி சதீஸ்குமாரை அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துணிகளால் சுற்றி வீட்டினுள் மறைத்து வைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் வெளியே சென்றுள்ளார்.

மறுநாள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தள்ளுவண்டியில் பழைய துணிகளை போட்டு அதன் மேல் சதீஸ்குமாரின் உடலை வைத்து மேலே மீண்டும் துணிகளை வைத்து மறைத்து புதிய பஸ் நிலையம் வரை கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் விடியும் நேரமாகிவிட்டதால் தன்னை யாரேனும் அடையாளம் கண்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் சாலை ஓரத்தில் இருந்த முட்புதரில் சடலத்தை வீசிவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாராயணசாமியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்