வீரபாண்டியன்பட்டினம், இனிகோ நகரில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை

வீரபாண்டியன்பட்டினம், இனிகோ நகரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

Update: 2019-09-06 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு காரணங்களால் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கடந்த ஒரு ஆண்டாக நடக்கவில்லை. இனிமேல் தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும். பெரியதாழை பகுதியில் மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ரூ.30 கோடியில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். அந்த பணி விரைவில் தொடங்க உள்ளது. அதேபோல் மணப்பாடு பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் அதற்கான பணி தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சியில் மீனவர்கள் அதிகமாக உள்ள கிழக்கு மண்டலத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டுகள் பெண்கள் வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன. 2 வார்டுகள் மட்டுமே ஆண்கள் வார்டாக உள்ளன. இதனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகு என்ஜின் திறனை மாற்றி அமைக்க அவகாசம் கொடுக்கப்பட்ட போதிலும், இன்னும் சில விசைப்படகுகளில் விதிகளை மீறி 450 முதல் 550 எச்.பி. திறன் கொண்ட என்ஜின்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தும் விசைப்படகு மீனவர்கள், அதற்கான இழப்பீடுகளை வழங்க மறுக்கிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலந்தலை, மணப்பாடு பகுதியில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையங்களை முழுமையாக செயல்பட வைக்க வேண்டும். மணப்பாட்டில் தூண்டில் பாலம் அமைப்பதற்கு பதிலாக சிறிய துறைமுகம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். புன்னக்காயல் தூண்டில் வளைவில் இருபுறமும் உருவாகி உள்ள மணல் மேடுகளை அகற்றி விட்டு ஆழப்படுத்த வேண்டும். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம், தூத்துக்குடி இனிகோ நகர் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க வேண்டும்.

தருவைகுளத்தில் 200-க்கும் மேற்பட்ட கைப்பந்து வீரர்கள் உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற வசதியாக மைதானம் அமைக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம், கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் இருப்பதால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா தலைநகரங்களில் 100 சதவீதம் மீனவ பெண் தொழிலாளர்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய மீன் சந்தைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வார்டுகள் மறுசீரமைப்பு குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். விசைப்படகுகளில் விதிகளை மீறி அதிக திறன் கொண்ட என்ஜின்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மணப்பாட்டில் சிறிய துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும், கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையங்கள் முழுமையாக செயல்படவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புன்னக்காயல் தூண்டில் வளைவில் உள்ள மணல் மேடுகளை அகற்றுவது தொடர்பாகவும், வீரபாண்டியன்பட்டினம், இனிகோ நகரில் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தருவைகுளத்தில் கைப்பந்து வீரர்கள் பயிற்சிக்காக மைதானம் அமைக்க மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பேசி நல்ல முடிவு எட்டப்படும். மீனவ பெண் தொழிலாளர்களுக்கு மீன் சந்தைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர்கள் பாலசரசுவதி, வயோலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்