பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு; ஷோபா எம்.பி. சிறப்பு பூஜை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பத்ரா அணை முழுகொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் அந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு ஷோபா எம்.பி. சிறப்பு பூஜை செய்தார்.

Update: 2019-09-06 23:00 GMT
சிக்கமகளூரு, 

கர்நாடகத்தின் மலைநாடு என்றழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததுடன், சாலைகளும் துண்டிக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் பரிதவித்து வந்தனர். இதையடுத்து மழை நின்றதால் சிக்கமகளூரு மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிக்கமகளூரு மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

இந்த நிலையில் சிக்கமகளூருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தரிகெரே தாலுகாவில் அமைந்துள்ள பத்ரா அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், 186 அடி கொள்ளளவு கொண்ட பத்ரா அணை, தனது முழுகொள்ளளவை எட்டி நிரம்பியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பத்ரா அணையில் இருந்து பாசன வசதிக்காக 4 மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதற்கிடையே, பத்ரா அணை நிரம்பி உள்ளதால், அந்த அணைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். அவருடன் தரிகெரே எம்.எல்.ஏ. சுரேஷ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சுஜாதா, தாலுகா பஞ்சாயத்து தலைவி பத்மாவதி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் ஷோபா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் பலத்த மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். விவசாயிகளின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜனதா அரசு மேற்கொள்ளும் என்றார். 

மேலும் செய்திகள்