வேலூர் மாவட்டத்தில் 269 ஏரிகளில் ரூ.27கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்டத்தில் 269 ஏரிகளில் ரூ.27 கோடியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Update: 2019-09-06 22:45 GMT
காட்பாடி, 

காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேனூர் ஊராட்சிக்குட்பட்ட சோழக்குட்டை ஏரியில் ரூ.5 லட்சத்தில் குடிமராமத்து பணிநடைபெற்று வருகிறது. இந்த பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வுசெய்தார். அப்போது இந்த ஏரிக்கான வரத்து கால்வாய், நீர் ஆதாரம் குறித்து வரைபடத்தை பார்த்து கேட்டறிந்தார்.

மேலும் அங்கிருந்த விவசாயிகளிடம், இந்த ஏரி கோடிபோய் எத்தனை ஆண்டுகளாகிறது என்று கேட்டார். அதற்கு அவர்கள் 15 ஆண்டுகளாகிறது என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களிடம் கலெக்டர் இந்த ஏரி மற்றும் குளங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 519 ஏரிகள் உள்ளன. முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பொதுப்பணித்துறை சார்பில் 49 ஏரிகள், 4 பாசனகால்வாய்கள், ஊரகவளர்ச்சித்துறை சார்பில் 220 ஏரிகள், 471 குளங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.12 கோடியும், பொதுப்பணித்துறைக்கு ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி உள்ளே இருக்கும் கருவேலமரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகளை பலப்படுத்தி, கரைகளின்மேல் பனை விதைகள் நடப்படும்.

கரைகளின்மேல் 4 லட்சம் பனைவிதைகளை 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை கொண்டு நட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த குடிமராமத்து பணி வருகிற 15-ந் தேதியுடன் முடிவடையவேண்டும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தைவிதி அமலில் இருந்ததால் கடந்த மாதம் 11-ந் தேதிதான் குடிமராமத்து பணிதொடங்கப்பட்டது. இப்போது நடைபெற்று வருவது முதல்கட்ட குடிமராமத்து பணி. இவை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் முடிக்கப்படும். குடிமராமத்து பணிகள் நடைபெற்ற ஏரிகளில், எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் நடந்தன என்பது உள்பட முழு விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காட்பாடி தாசில்தார் பாலமுருகன், காட்பாடி வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, பானுமதி, காட்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கே.எஸ்.சுபாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் லத்தேரி ஏரியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்