சுருளி அருவியில் குளிப்பதற்கு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக உயர்வு

சுருளி அருவியில் குளிப்பதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.30 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-09-06 22:45 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி முக்கிய சுற்றுலாத்தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் மற்றும் தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. இதில் குளித்தால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தேனி மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதே போல் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் ஏராளமானவர்கள் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் நபர் ஒன்றுக்கு நுழைவு கட்டணமாக வனத்துறை சார்பில் ரூ.5 வசூல் செய்யப்பட்டது. அப்போது இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அந்த கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முதல் சுருளி அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெரியவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.30, குழந்தைகளுக்கு ரூ.20, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரியவர்களுக்கு ரூ.300, குழந்தைகளுக்கு ரூ.200 என உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.5, தனியார் பள்ளி மாணவர்களுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.20 என்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் அருவிபகுதிக்கு கேமரா எடுத்து செல்ல ரூ.50, வீடியோ கேமரா எடுத்து செல்ல ரூ.300 என்றும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கேமரா எடுத்து செல்ல ரூ.500, வீடியோ எடுக்க ரூ.3 ஆயிரம் என்றும் உயர்த்தியுள்ளனர்.

நுழைவு கட்டணத்தை ரூ.5-ல் இருந்து திடீரென ரூ.30 ஆக உயர்த்தியதற்கு சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த ராஜகுரு பாண்டியன் கூறியதாவது:-

சுருளி அருவி பகுதியில் தென் மாவட்ட மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த புண்ணிய அருவியில் குளிப்பதற்கு கட்டணம் ரூ.30 என்று உயர்த்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே கட்டண உயர்வை உடனே திரும்பபெறவேண்டும். இல்லையென்றால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த நதியா கூறியதாவது:-சுருளி அருவியில் பல வருடங்களாக எவ்வித கட்டணமும் இன்றி பொதுமக்கள் குளித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நுழைவு கட்டணம் ரூ.5 என்று அறிவித்து வசூல் செய்தனர். தற்போது அதை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். ஐந்தருவி கொட்டுகிற குற்றாலத்தில் குளிப்பதற்கு கட்டணம் இல்லை. ஆனால் இங்கு மட்டும் கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்கின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இதில் தலையிட்டு கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கம்பத்தை சேர்ந்த சொக்கராஜா கூறியதாவது:- சுருளி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை 5 ரூபாய் கட்டணம் வசூலித்தும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக பெண்கள் உடைமாற்றும் அறை பழுதடைந்து உள்ளது. போதிய கழிப்பிட வசதிகள் இல்லை. அருவிபகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் துணிகள் குவிந்து கிடப்பதை இன்றுவரை தூய்மைபடுத்த வில்லை. இப்படி இருக்கும் நிலையில் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். எதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது? என்று வனத்துறை விளக்கம் அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்