திருவொற்றியூரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

திருவொற்றியூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-06 22:00 GMT
திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், சின்னகுப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி முத்துநகர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென்று மின்சாரம் தடைப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இரவு 10 மணி ஆகியும் மின்சாரம் வராததால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அருகே கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் ஒன்று கூடி மின்வாரிய அதிகாரியை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

அப்போது பொதுமக்கள் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் தாங்கள் மிகுந்த அவதிப்படுவதாக போலீஸ் அதிகாரிகளிடம் கூறினர். உடனே அப்பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அங்குள்ள உயர்மின்னழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த பின்னர் அப்பகுதிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்