நிலக்கோட்டை அருகே, காணாமல் போன பூ வியாபாரி கால்வாயில் பிணமாக மீட்பு

நிலக்கோட்டை அருகே காணாமல் போன பூ வியாபாரி கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2019-09-06 22:30 GMT
நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சக்கையநாயக்கனூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 31). இவர், அப்பகுதியில் பூக்கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி மீனா. இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி ஜெகதீசன் அணைப்பட்டி வைகை-பெரியார் பிரதான கால்வாயில் குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் தனது கணவர் காணாமல் போனது குறித்து மீனா விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காணாமல் போன ஜெகதீசனை தேடி வந்தனர். இதற்கிடையில் மதுரை மாவட்டம் கரட்டுப்பட்டி பிரிவு அருகே வைகை-பெரியார் பிரதான கால்வாயில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக விளாம்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அது காணாமல் போன ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவருடைய மனைவி மீனாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரும் தனது கணவர் ஜெகதீசன் தான் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து ஜெகதீசனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வைகை-பெரியார் கால்வாயில் குளிக்க சென்றபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு ஜெகதீசன் இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்