ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, சின்னப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், விளையாட்டு மற்றும் கலை இலக்கிய துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார். மேலும் 172 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதன்பிறகு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், இந்தியாவில் அதிக சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் தமிழகம் தான். தேர்தலின்போது வ.உ.சி. பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும். அப்போது அந்த நீதிமன்றத்துக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும். வ.உ.சி.யின் அடுத்த பிறந்தநாளுக்குள் நீதிமன்றம் செயல்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகசுந்தரம், ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சுற்றுப்பயணத்தின்போது ரூ.2 ஆயிரத்து 780 கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்க, அதன்மூலம் மாநிலத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கிறார். அதை வைத்து அவர் அரசியல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் செல்லும் வெளிநாட்டு பயணம் மட்டும் ரகசியமாக இருக்கிறது. அது ஏன் என மக்கள் கேட்க தொடங்கி விட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதை பாராட்ட வேண்டும். அதற்கு மனம் இல்லை என்றாலும் கூட விமர்சிக்காமல் இருந்தால் அது அவருக்கும் நல்லது, தமிழக மக்கள் நலனுக்கும் நல்லது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்பே சட்டமன்றத்தில் விரிவாக தெரிவித்து உள்ளார். அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் சொல்வதையெல்லாம் அரசு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.