சில்லாங்குளம் பள்ளியில் 954 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி: அமைச்சர்கள் வழங்கினர்

சில்லாங்குளம் பள்ளியில் 954 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் வழங்கினர்.

Update: 2019-09-05 22:00 GMT
ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். சின்னப்பன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி வரவேற்றார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 954 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பிலான இலவச மடிக்கணினிகளை வழங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

தமிழகத்திலேயே ஒரே நேரத்தில் 954 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்ட பள்ளி, சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி தான். தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி கண் திறந்தவர் காமராஜர். கல்விக்கு உயிர் தந்தவர் ஜெயலலிதா. ‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 452 ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் அரசு சார்பில் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, யூனியன் ஆணையாளர் ராமராஜன், பள்ளி கண்காணிப்பாளர் சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், நெல்லை ஆவின் தலைவர் சுதாபரமசிவன் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டனை நிர்வாக இயக்குனர் பாலமுருகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்