“அரசு செலவில் அமைச்சர்கள் சுற்றுலா செல்வதாக தெரிகிறது” தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் அமைச்சர்கள் வெளிநாடு பயணம் செல்வது, அரசு செலவில் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருப்பது போன்று தெரிகிறது என்று தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று காலை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை வரவேற்கும் நிலையில் தான் தமிழக அரசு உள்ளது. அந்த அளவிற்கு மத்திய அரசின் பிடியில் தமிழக அரசு சிக்கி உள்ளது. மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு‘ என்ற திட்டம், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த மக்களுக்கு பயன்படும் என்று நிலைக்கலாம். ஆனால், இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும் கைது செய்யப்படுவார் என எச்.ராஜா கூறியுள்ளார்.
மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் அவர் அப்படி பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தலைவராக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் பா.ஜனதாவின் மாநில தலைவர் அறிவிக்கப்படுவார். அதன் பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிப்பேன்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அமைச்சர்கள் யாரும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றது இல்லை. தற்போது அவர்கள் சுற்றுப்பயணம் செல்வது புதுமையாக உள்ளது. ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் அமைச்சர்கள் வெளிநாடு பயணம் செல்வது, அரசு செலவில் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருப்பது போன்று தெரிகிறது. அவர்களின் சுற்றுப்பயணம் தமிழக வளர்ச்சிக்காக இருந்தால், நான் அதனை வரவேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நெல்லை பொருட்காட்சி திடலில் உள்ள மணிமண்டபத்துக்கு வந்த தொல்.திருமாவளன் அங்குள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர் கூறியதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கும். தமிழகத்தில் தி.மு.க. கட்சி தலைமையையும், கூட்டணி கட்சிகளையும் மட்டுமே நம்பி மக்கள் வாக்களித்து உள்ளனர். இதற்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுமே சாட்சி ஆகும். அந்த வழியில் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல செயலாளர் ஐகோர்ட்டு பாண்டியன், நெல்லை மாவட்ட செயலாளர் கரிசல்சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தொல்.திருமாவளவன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.