நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகள் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பில் ஏரி, கால்வாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரி, கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் ரூ.32 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேற்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகள், நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மழைநீரை சேகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தேவசமுத்திரம் ஏரி ரூ.5 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கடந்த வாரம் பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் அதிக அளவு சேமிக்கப்பட்டுள்ளது. கட்டிகானப்பள்ளி புதூர் ஏரிக்கு நீர் வரத்து பகுதியான பொன்மலைக்கோவில் மலை அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் துரத்திற்கு ரூ. 6 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் தூர் வாரப்பட்டு ஏரிக்கு தடையில்லாமல் நீர் வரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போல பொன்மலைக்கோவில் மலை அடிவாரத்தில் மழை நீர் தேங்கி செல்லும் வகையில் குளம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிக அளவில் அப்பகுதியில் மழை நீரை சேமிக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக கருத்துரு தயார் செய்து தடுப்பணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 100 ஏரிகள், 325 குளம், குட்டைகள் தூர்வார முதல்-அமைச்சர் கடந்த மாதம் ஆணையிட்டு நிதி ஒதுக்கி உள்ளார். ஒரு மாதமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுதலாக 100 ஏரிகள் தூர் வாருவதற்கு தமிழக முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். அந்த வகையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 200 ஏரிகள், 325 குளம் குட்டைகள் தூர்வாரும் பணிகள் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக முடிக்கப்பட உள்ளது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் 150 ஏரிகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே, மாவட்டத்தில் உள்ள 625 ஏரிகள் மற்றும் குளங்கள் தூர் வாரி கரைகள் பலப்படுத்தியும், நீர் வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய், மதகுகள் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர் மட்டம் உயர வழி வகை செய்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எதிர் காலத்தில் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நீர் மேலாண்மை பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பின் தலைவர் உதயகுமார், செயலாளர் சிவகுமார், பொருளாளர் ஆனந்தகுமார், பிரதிநிதிகள் லாரன்ஸ், மகேஷ், சுரேஷ், ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.