உறவினர் இறந்ததால் பொருட்களை அடித்து சேதம்: கடைக்காரர்கள் திடீர் சாலைமறியல் - 8 பேர் கைது

மோகனூர் அருகே உறவினர் இறந்ததால் கடைகளை மூடச்சொல்லி பொருட்களை அடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடைக்காரர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொருட்களை சேதப்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-05 22:30 GMT
மோகனூர், 

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் வளையப்பட்டி உள்ளது. வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இறந்தார்.

இவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் இறுதி ஊர்வலம் சென்றனர். அப்போது வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது அப்பகுதியில் உள்ள டீக்கடை, மளிகை கடைகள் திறந்து இருந்ததை பார்த்து, எங்களது உறவினர் இறந்து விட்டார். நீங்கள் கடையை சாத்த வேண்டியதுதானே எனக்கூறி தகராறு செய்ததோடு, கடைகளில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் வளையப்பட்டி பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்து அங்கு சென்ற மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீசார் வியாபாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்டு, பொருட்களை சேதப்படுத்தியதாக வள்ளுவர் நகரை சேர்ந்த தீபக் (23), அன்பரசன் (29), புருஷோத்தமன் (26), கிருபாகரன் (23), அருண்பாண்டியன் (24), சரவணன் (26), ராம்குமார் (28), எருமப்பட்டியை சேர்ந்த அருண் (27) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான சிலரை கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்