சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் விளம்பர பேனர்கள் வைத்தால் சிறைதண்டனை - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் விளம்பர பேனர்கள் வைத்தால் ஒரு வருட சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-04 22:30 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பர பேனர்கள் வைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் எதிர்காலத்தில் உயர்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடை, நீதிமன்றத்தால் விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், சென்னை மாநகராட்சி சட்ட விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளம்பர பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பதாரர், அனுமதி கோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, வைக்கப்படும் இடத்திற்கான தடையின்மை சான்று, இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விளம்பர பேனர்கள் நடைபாதை ஓரமாக அமைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் அமைக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும், எண்ணிக்கையை விடவும் கூடுதலாக பேனர்கள் வைக்கக்கூடாது. ஒவ்வொரு விளம்பர பேனர்களுக்கு இடையே 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே விளம்பர பேனர்கள் அச்சடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி நடைபெற்ற இதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சட்ட விதி முறைகளை மீறுபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்