பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

கடலூர் தேவனாம்பட்டினம் கடலில் பக்தர்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. இதை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் நேரில் பார்வையிட்டார்.

Update: 2019-09-04 22:30 GMT
கடலூர்,

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுஇடங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகள் 3 மற்றும் 5-வது நாளில் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி விநாயகர் சிலைகளை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், வெள்ளாறு, உப்பனாறு மற்றும் கொள்ளிடம் ஆறு ஆகிய 4 நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 3-வது நாளான நேற்று பக்தர்கள் தாங்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து குறிப்பிட்ட நீர் நிலைகளில் கரைத்தனர். அதன்படி கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று காலையில் லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு கொண்டு வந்தனர்.

அங்குள்ள உயர்கோபுர மின்விளக்கு அருகே வந்ததும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை தூக்கி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு விநாயகரை கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்க்காவல் படை, போலீஸ் நண்பர்கள் ஆகியோரை கொண்ட குழுவினர் கடலில் கரைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரையும் கடலில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் கடலூர் வண்ணாரப்பாளையம் முதல் சில்வர் பீச் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் மிதவை உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையே சிலைகள் கரைக்கும் பணியை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் நேரில் பார்வையிட்டார். அப்போது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மா புரம், கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி, பெண்ணாடம் பகுதியில் மொத்தம் 214 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பின்னர் அந்தந்த பகுதி போலீசார் மற்றும் விழாக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சதுர்த்தி விழா முடிந்து 3-வது நாளான நேற்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மங்கலம்பேட்டையை தவிர விருத்தாசலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 160 விநாயகர் சிலைகளுக்கு நேற்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வயலூர் ஏரி உள்பட அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை அருகே அரியகோஷ்டி, அகரம், சேவாமந்திர், பெரிய கடைதெரு, சலங்கு கார தெரு உள்ளிட்ட 35 இடங்களிலும், புதுச்சத்திரம் பகுதியில் 25 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டது. பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சி.புதுப்பேட்டை மற்றும் பெரியகுப்பம் கடலில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்