நெல் சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
நெல் சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக வாய்க்கால் சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி,
காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி மேட்டூர் அணையும், 17-ந் தேதி கல்லணையும் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இன்னமும் கிளை வாய்க்கால் களுக்கு திறந்து விடப்படவில்லை.
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முக்கியமான கிளை வாய்க்கால்களாக உள்ள பிள்ளைவாய்க்கால், ஆனந்தகாவிரி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த வாய்க்கால்களை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கிளை வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். திருக்காட்டுப்பள்ளி பிள்ளைவாய்க்காலில் கச்சமங்கலம் தலைப்பில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு சீரமைப்பு பணிகள் ரூ.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் 3 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிள்ளைவாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்காலில் மதகுகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உடனடியாக நிறுத்தி நெல் சாகுபடி பணிகளை தொடங்க வசதியாக வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கல்லணை திறக்கப் பட்டதும் ஓரிரு நாட்களிலேயே ஆனந்த காவிரி வாய்க்காலுக்கு தண்ணீர் வந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கல்லணை திறந்து பல நாட்களான பின்னரும் ஆனந்த காவிரி வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை.
இதனால் ஆனந்த காவிரி வாய்க்கால் தண்ணீரை கொண்டு நிரம்பும் கள்ளப் பெரம்பூர் ஏரியும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.