பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்கள் வழங்க வேண்டும் - அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை
தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்கள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீலகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கியமானதாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம். இந்த தேயிலை தொழிலை நம்பி சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். ஆனால் கூலி தொழிலாளர்களின் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டத்தின் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இருப்பினும் தேயிலை தோட்டங்களில் பணி செய்ய நவீன எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஓரளவு தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடிகிறது. ஆனால் அவைகளை பணம் கொடுத்து வாங்க முடியாமல் பல விவசாயிகள் தவிக்கின்றனர்.
தமிழக அரசு காய்கறி விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து விதைகள், மருந்து தெளிப்பான்கள், நீர் பாய்ச்சும் எந்திரம், பாசன கிணறு அமைத்தல் உள்ளிட்ட தேவைகளுக்கு குறைந்தபட்சம் 50 சதவீதம் முதல் அதிகபட்சம் 100 சதவீதம் வரை மானியம் அளித்து வருகிறது. ஆனால் தேயிலை விவசாயத்தை கண்டு கொள்வது இல்லை என்பது நீலகிரி விவசாயிகளின் கவலையாக உள்ளது.
எனவே தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்களை விலையில்லாமல் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், விரக்தியடைந்த சில விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். வேறு சிலரோ தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் பச்சை தேயிலையை பறிக்க முடியாமல் உள்ளனர். இதனால் தேயிலையின் தரம் குறைகிறது.
ஒரு சில விவசாயிகள் வேறு வழியின்றி பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்கள் வாங்கி, அதன் மூலம் பச்சை தேயிலையை பறித்து ஓரளவு சமாளித்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்கள் வாங்க முடியாமலும், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமலும் உள்ளனர்.
எனவே காய்கறி விவசாயிகளுக்கு வழங்கும் முன்னுரிமையை போல தேயிலை விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கி மானியம் வழங்க வேண்டும். தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்களை விலையில்லாமல் வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.