பல்லாரியில் பரபரப்பு: பாதாள சாக்கடை நீருக்கு மத்தியில் அமர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. போராட்டம்

பல்லாரியில் பாதாள சாக்கடை நீருக்கு மத்தியில் அமர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-03 23:39 GMT
பல்லாரி, 

பல்லாரி மாநகராட்சியில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் அந்த நீர் தேங்கி நிற்பது வழக்கமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கணேஷ் காலனியில் நேற்று பாதாள சாக்கடை நீர் தேங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. சோமசேகர்ரெட்டி, பாதாள சாக்கடை நீருக்கு மத்தியில் ஒரு கல் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 6.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து சாக்கடை நீரை எந்திரம் மூலம் உறிஞ்சி அகற்றினர்.

இதுகுறித்து சோமசேகர்ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், “எனது தொகுதியில் உள்ள இந்த பகுதியில் பாதாள சாக்கடை நீர் சூழ்ந்தது. பல்லாரியில் 1978-ம் ஆண்டு பாதாள சாக்கடை குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நகரின் மக்கள்தொகை அதிகரித்துவிட்டது. பழைய குழாய்களை மாற்றவில்லை. அவற்றின் மீது சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், அவ்வப்போது பாதாள சாக்கடை குழாய்கள் அடைக்கப்பட்டு, அந்த நீர் வெளியே வருகிறது“ என்றார். எம்.எல்.ஏ. நடத்திய போராட்டத்தால் அங்கு சிறிது பர பரப்பு உண்டானது. 

மேலும் செய்திகள்