மராட்டிய புதிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி நாளை பதவி ஏற்பு: வித்யாசாகர் ராவுக்கு வழியனுப்பு விழா நடந்தது
மராட்டிய புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட பகத்சிங் கோஷ்யாரி நாளை பதவி ஏற்றுக்கொள்கிறார். பதவி காலம் முடிந்த கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
மும்பை,
மராட்டியத்தின் புதிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரியை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார். மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளார்.
இந்தநிலையில், மராட்டிய கவர்னராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவுக்கு கவர்னர் மாளிகையில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன், ஆஷிஸ் செலார், ஜெய்குமார் ராவல், தலைமை செயலாளர் அஜாய் மேத்தா, போலீஸ் டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வே மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்-மந்திரி பட்னாவிஸ் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு பொன்னாடை போர்த்தியும், பூச்செண்டு கொடுத்தும் கவுரவித்தார்.
தனது பதவி காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு அளித்த முதல்-மந்திரி பட்னாவிஸ், அமைச்சர்கள், மராட்டிய மக்களுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் நன்றி தெரிவித்தார்.