பா.ஜனதா - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: இன்னும் 10 நாட்களில் நடக்கிறது
மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கிறது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றது.
விரைவில் நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் சிவசேனா கட்சி தலைவர்களை தொகுதி பங்கீடு குறித்து மராட்டிய பா.ஜனதா கட்சி தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் மந்திரி சுதிர் முங்கண்டிவார் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்.
இதுகுறித்து மந்திரி சுதிர் முங்கண்டிவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு திட்டத்தை வகுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த 10 நாட்களுக்கு சிவசேனா தலைவர்களை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். சந்திரகாந்த் பாட்டீல் இந்த பேச்சுவார்த்தையை தலைமையேற்று நடத்துவார். நானும் கலந்து கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தினாலும், தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே யார் பெரிய அண்ணன் என்ற போட்டி நிலவி வருகிறது. இந்த முறை சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தேர்தலில் போட்டிடுவார் என கருதப்படுகிறது. சிவசேனா கட்சி சார்பில் இவரும் முதல்-மந்திரி போட்டியில் இருப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பிரச்சினையே இரு கட்சிகளும் பிரிந்து தனித்தனியே போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மும்பை வந்த பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவுக்கு சென்றார். மேலும் மாநில பா.ஜனதா தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். ஆனால் சிவசேனா தலைவர்களை சந்திப்பதை அவர் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.