2,700 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி: நடிகைகள் ஷரத்தா கபூர், தியா மிஷ்ரா எதிர்ப்பு

2,700 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்ததற்கு நடிகைகள் ஷரத்தா கபூர், தியா மிஷ்ரா எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-09-03 23:15 GMT
மும்பை, 

மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பணிமனை அமைக்க மெட்ரோ ரெயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2,700 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மும்பை ஆரே வனப்பகுதி அருகே அப்பகுதி மக்கள் கடந்த 1-ந்தேதி மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தி நடிகை ஷரத்தா கபூர் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:-

இயற்கை தாயை ஆதரிக்க நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி உள்ளோம். எங்களுக்கு ஏற்கனவே மாசு பிரச்சினைகள் உள்ளன. எனவே மரங்களை வெட்டுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்க முடியும்?

மும்பையின் நுரையீரலை வெட்ட நீங்கள் எவ்வாறு அனுமதி வழங்க முடியும்?. 2,700-க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்படுவதாக கூறப்படுகிறது. இது நகைப்புக்குரியது. மரங்களை வெட்ட வழங்கப்பட்ட இந்த அனுமதி கேலிக்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை தியா மிஷ்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “மெட்ரோ ரெயில் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. தயவுசெய்து ரெயில் பணிமனையை கட்டுங்கள். ஆனால் விலைமதிப்பற்ற மனித சேவைகளை வழங்கும் சுற்றுச்சூழலை இதற்கு விலைகொடுக்க தேவையில்லை. பணிமனையை உருவாக்க மாற்று வழிகள் உள்ளன. இதற்கு அதிக காலம் ஆகலாம். ஆனாலும் சிறந்ததை தேர்வு செய்யுங்கள். ஆரே காலனி வன படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்” என அதில் கூறியுள்ளார்.

மேலும் பல இந்தி திரையுலக பிரபலங்களும் மாநகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்