காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தடையை மீறி ஜேடர்பாளையம் படுகை அணையில் குளிக்கக்கூடாது

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் தடையை மீறி குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-03 23:00 GMT
பரமத்திவேலூர்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் கடமடைவரை தண்ணீர் முழுமையாக சேரவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என நாகை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 18 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் முழுமையாக ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் பரமத்தி வேலூரை வந்தடைந்தது. இதனால் வரண்டு கிடந்த காவிரி தற்போது முழுமையாக தண்ணீர் நிரம்பி காட்சியளித்து வருகிறது.

இதன் காரணமாக விடுமுறை நாட்களில் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி ஜேடர்பாளையம் மற்றும் பரமத்தி வேலூர் காவிரி ஆறு பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையை மீறி ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் குளிப்பதையும், செல்பி எடுப்பதையும் காணமுடிகிறது. எனவே ஜேடர்பாளையம் மற்றும் பரமத்தி வேலூர் காவிரி ஆறு பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் வருவதால் படுகை அணை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும், காவிரி ஆற்றில் செல்பி எடுப்பது மற்றும் ஆழமான பகுதிக்கு குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்