நாமக்கல்லில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் - கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் நேற்று நடந்த நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

Update: 2019-09-03 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல்லில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து, இந்த ஊர்வலத்தை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்து, சிறிது தூரம் நடந்து சென்றார்.

இதில் ஜல்சக்தி அபியான் திட்ட நாமக்கல் மாவட்ட பொறுப்பு அலுவலரும், பஞ்சாயத்துராஜ் உதவி செயலாளருமான அனு, நகராட்சி ஆணையாளர் சுதா, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் டாக்டர் அகிலா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் திருச்சி சாலை, பயணியர் மாளிகை வழியாக சென்று பூங்கா சாலையில் நிறைவு பெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இதை தொடர்ந்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஜல்சக்தி அபியான் திட்ட பொறுப்பு அலுவலர் டாக்டர் அனு தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் நீர் மேலாண்மையின் வழிமுறைகள், மழை நீர் சேகரிப்பு மாதிரி, நுண்ணீர் பாசனம், சொட்டு நீர் பாசனம் குறித்த மாதிரிகள் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இவற்றை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற நீர் மேலாண்மை கருத்தரங்கத்தை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் தொடங்கி வைத்து, மாவட்டத்தில் சிறந்த முறையில் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொண்டு உள்ள விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்