உத்தமபாளையம் அருகே, கார் கவிழ்ந்து கேமராமேன் பலி-நடிகர் படுகாயம்
உத்தமபாளையம் அருகே கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த கேமராமேன் பரிதாபமாக இறந்தார். நடிகர் படுகாயம் அடைந்தார்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த கோம்பை மலையடிவார பகுதியில் கடந்த 25 நாட்களாக டி.வி. தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், கேமராமேன் உள்ளிட்டோர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். நேற்று கோம்பை மலையடிவாரத்தில் டி.வி. தொடர்கள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் உத்தமபாளையம் நோக்கி கார் மற்றும் ‘கேரவன்’ வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். இதில் காரை தேனி கோடங்கிப்பட்டியை சேர்ந்த தவசி (வயது 59) என்பவர் ஓட்டினார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கொம்பன், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடன் சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த கேமராமேன் சிவா (55) என்பவர் வந்தார். மற்றவர்கள் ‘கேரவன்’ வாகனத்தில் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
கோம்பை இரட்டை புளியமரம் பகுதியில் கார் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் 4 முறை உருண்டு கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் காரில் வந்த சிவா சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயங்களுடன் தவசி உயிருக்கு போராடினார். விபத்து தகவல் அறிந்ததும் கோம்பை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ்கொடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த தவசியை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சிவா, நடிகர்கள் விஜய், அஜித், மோகன்லால் உள்ளிட்டோருக்கு கேமராமேனாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.