தொடர் மின்வெட்டை கண்டித்து அம்மையப்பனில் பொதுமக்கள் சாலை மறியல் - 50 பேர் மீது வழக்குப்பதிவு
தொடர் மின்வெட்டை கண்டித்து அம்மையப்பனில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரடாச்சேரி,
கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தொடர் மின்வெட்டை கண்டித்து அம்மையப்பன் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர்-தஞ்சாவூர் சாலையில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.